பயப்படும் அரசியல்வாதிகள்: ஜிகே வாசன் சாடல்

ஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது.

பயம் காரணமாக விவசாயிகளின் பிரச்னையை இங்குள்ள அரசியல்வாதிகள் கண்டும் கொள்வதில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் சாடியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள் பயம் காரணமாக விவசாயிகளின் பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை. விவசாயக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் ஜிஎஸ்டி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எந்த ஒரு திட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வை முன்னதாகவே பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம். ஆனால் ஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது என்றார்.

தமிழக அமைச்சர்களின் கருத்து வேறுபாட்டால் தொழிற்சாலைகள் எப்படி வெளி மாநிலங்களுக்குச் சென்றதோ, அதேபோன்று எய்ம்ஸ் மருத்துவமனையும் வெளிமாநிலத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்று வலியுறுத்திய வாசன், ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகம் பயன்பெறும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

×Close
×Close