மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேட்டில் கம்பராமாயண விழா நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இது ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடக்க விழாவில் பேசிய ஆளுநர் ரவி, குறுகிய மனப்பான்மையுடன் கூடிய அதிகார அரசியல் நமது வளமான வாழும் தமிழ் கலாசார பாரம்பரியத்தை பெரிதும் பாதித்துள்ளது என்று விமர்சித்துள்ளார். கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கடந்த 18-ந் தேதி கம்பரை போற்றும் விதமாக விழா நடத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி மத்திய அரசின் பண்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்படும், இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கம்பர் பிறந்த ஊராக கருதப்படும் தேரழுந்தூர் என்னும் கிராமத்திலுள்ள கம்பர்மேடு என்னும் இடத்தில் கம்பராமாயண விழாவை மார்ச் 30 முதல் ஏப்ரல் 06 வரை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கம்பராமாயணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பாரம்பரியத்தையும் உணர்த்தும் நோக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, மார்ச் 30 தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியதாவது, " சைத்ரா நவராத்திரியின் முதல் நாளில் மயிலாடுதுறையில் உள்ள தேரழுந்தூரில், மத்திய கலாசார அமைச்சகத்தால் 10 நாட்கள் கம்ப ராமாயண விழாவை நடத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் கலைஞர்கள் ராமாயண நாடகங்களையும், கம்ப ராமாயணத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள் சொற்பொழிவுகளையும் வழங்குவர். இந்நிகழ்வு மக்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது நமது இளைஞர்களிடையே வளமான தமிழ் கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும். துரதிருஷ்டவசமாக, பல தசாப்தங்களாக குறுகிய மனப்பான்மையுடன் கூடிய அதிகார அரசியல் நமது வளமான வாழும் தமிழ் கலாசார பாரம்பரியத்தை பெரிதும் பாதித்துள்ளது.
பிரதமரின் முன்முயற்சி, பல்வேறு கம்பன் கழகங்களை புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் கம்ப ராமாயணத்தைப் பரப்ப ஊக்குவித்துள்ளது. பிரதமர் மோடி போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசிய தலைவரைப் பெற்றதில் நாம் பெருமை கொள்கிறோம்" என்றார்.