மு.க.ஸ்டாலின் - வைகோ - திருமா: முக்கோண ஊடல் முடிந்ததா?

துரைமுருகன் ஏன் வைகோவையும், திருமாவையும் வம்பிழுத்தார்? எதற்காக இந்த நாடகம்?

ஒரே ஒரு பேட்டி, தி.மு.க. நட்பு(?) கட்சிகளுக்குள் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சமீபத்தில் தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் எங்கள் நட்பு கட்சிகள் தான் என கூறியிருந்தார்.

“தோழமைக் கட்சிகள் வேறு, கூட்டணிக் கட்சிகள் வேறு. தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மட்டுமே கூட்டணி கட்சியாக கருத முடியும்!” என துரைமுருகன் கொழுத்தி போட்ட வெடிகுண்டு, மதிமுக, விசிக’வின் கனவை சிதறடித்துவிட்டது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”துரைமுருகனின் பேச்சு ம.தி.மு.க. தொண்டர்களின் மனதை புண்ணாக்கியிருக்கிறது. துரைமுருகன் அவர் முடிவை தெரிவித்துவிட்டார். இனி ஸ்டாலின் தான் பேச வேண்டும். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை ஸ்டாலின் தான் தெளிவுப்படுத்த வேண்டும்!” என உஷ்ணமாகியிருந்தார்.

திமுக கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்படலாம் என பதறிய திருமாவளவனும், “தோழமை கட்சிகள் என்பதால் கூட்டணி உருவாகாது என்பது இல்லை, உறுதியாக கூட்டணி அமையும். திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னது யதார்த்தமானது!” என்று தெரிவித்தார். அன்றைய தினமே ஸ்டாலினை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

மு.க.ஸ்டாலினின் ‘அப்பாயிண்ட்மென்ட்’ற்காக காத்திருந்த வைகோ, நவம்பர் 28 மாலை 4 மணிக்கு நேரம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்தவுடன், மதிமுக தரப்பே செய்தி சேனல்களுக்கு தகவல் அனுப்பியது. 28-ம் தேதி 4 மணிக்கு வரவேண்டிய ஸ்டாலின், 5 மணியாகியும் வீட்டை விட்டு கிளம்பவில்லை. 6 மணிக்கு மேல் பார்க்கலாம் என வைகோவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் மாலை 5:15 மணிக்கே தனது அண்ணாநகர் வீட்டிலிருந்து படை பரிவாரங்களுடன் அறிவாலயம் கிளம்பினார் வைகோ.

அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தவர், அவரது கரங்களை பிடித்து நலம் விசாரித்தார். அருகிலிருந்த துரைமுருகன் தன் வழக்கமான பாணியில் கலகலப்பூட்ட, வைகோவுடன் வந்திருந்தவர்கள் இறுக்கம் தளர்ந்தனர். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக’வின் ஆதரவை தேடி வந்தேன். அவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதே கூட்டணி தான்” என சுருக்கமாக பேசிவிட்டு கிளம்பினார். பஸ்ஸில் இடம்பிடிக்காத குறையாக, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு திமுக கூட்டணியில் துண்டு போட்டுள்ளனர்.

தி.மு.க.வின் ‘நம்பர் டூ’வாக துரைமுருகன் இருந்தாலும், ஸ்டாலின் அனுமதி இல்லாமல் கூட்டணி குறித்து தன்னிச்சையாக பேச முடியாது. திமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே, ஸ்டாலினின் கண் அசைவிற்கு ஏற்றார் போலத் தான் ஈடேறுகின்றன. அப்படியிருக்கையில், துரைமுருகன் ஏன் வைகோவையும், திருமாவையும் வம்பிழுத்தார்? எதற்காக இந்த நாடகம்? தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம்.

“ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமா சந்திக்கிறார். அதிமுக அமைச்சர்களின் புயல் நிவாரண நடவடிக்கைகளை வைகோ பாராட்டுகிறார். திமுக நட்பில் இருந்து கொண்டு, எதிர் தரப்பில் இருப்பவர்களுடன் இருவரும் நட்பு பாராட்டுகிறார்கள். இது ஸ்டாலினை கடுமையாக வெறுப்பேற்றிவிட்டது. அதற்காகத் தான், ‘ஒன்று எங்களோடு நில்லுங்கள். இல்லையென்றால் விலகிவிடுங்கள்’ என துரைமுருகன் மூலமாக செக் வைத்தார். பதறிப் போன இருவரும், தேடி வந்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இனி, தி.மு.க.வுடன் தான் பயணப்பட வேண்டியதிருக்கும்!” என்றார்.

வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக’விற்கு 25, காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்ந்து 10, மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளுக்கு தலா ஒன்று என தொகுதிகள் பிரிக்கலாம் என ஸ்டாலின் கருதுகிறார். ஒரு தொகுதி போதாது என வைகோவும், திருமாவும் முரண்டு பிடிக்கிறார்கள். திமுக’வை மிரட்டுவதற்காக எதிர்தரப்பிடம் வம்படியாக பேசி வருகிறார்கள். இதற்காகத் தான் துரைமுருகன் அஸ்திரத்தை ஸ்டாலின் ஏவியதாக சிலாகிக்கிறது திமுக தரப்பு.

இது சாணக்கியமாக இருந்தாலும், ஆபத்தும் இருக்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, 35 தொகுதிகளை கருணாநிதியிடம் கேட்டார் வைகோ. அவர் மறுக்கவே, தன்னை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கரம் கோர்த்தார். அத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், அறுதி பெரும்பான்மையோடு இல்லை. பாமக தலைவர் ராமதாஸின் மிரட்டல்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் பந்தாவிற்கும் பயந்தே ஆட்சியை நகர்த்த வேண்டியதிருந்தது. தன்னை எதிர்த்து மதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக’வே வெற்றி வாகை சூடியிருந்தாலும், வைகோவையும் கூட்டணிக்குள் வைத்திருந்தால், தனிப்பெருமான்மை கிடைத்திருக்க கூடும் என திமுக தலைவர்களே பேசினர்.

2016 தேர்தலில் தொகுதி உடன்படிக்கைக்கு திமுக ஒத்துவராததால், மக்கள் நலக் கூட்டணியை கட்டமைத்தவர் திருமாவளவன். பழம் நழுவி வாயில் விழாதா? என ஏங்கியிருந்த திமுக.வுக்கு கலிங்கப்பட்டி அல்வாவை கொடுத்துவிட்டு, விஜயகாந்தை ம.ந.கூட்டணிக்குள் இணைத்தவர் வைகோ. இவர்கள் இருவருக்கும் வெற்றி பெரும் சக்தி இருக்கிறதோ இல்லையோ, ஒரு கட்சிக்கு எதிராக கூட்டணியை கட்டமைத்து, எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, அக்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்கும் தொடர்புகள் இருக்கிறது.

2006, 2016 தேர்தல் போன்று, திமுக கூட்டணியில் போதிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்கிற காரணம் காட்டி, இருவரும் வெளியேறி புதிய கூட்டணியோ, மாற்று கட்சியிலோ இணைந்தால் இழப்பு ஸ்டாலினுக்கு தான்.

அதிமுக.வுக்கு 1996 தேர்தல் தந்த மரண அடி, அடுத்து வந்த 1998 பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டுமென்ற நெருக்கடியை ஜெயலலிதாவிற்கு ஏற்படுத்தியது. சைதாப்பேட்டையில் பாமக அலுவலகம், எழும்பூரில் தாயகம் என அவரே கூட்டணிக்காக படிக்கட்டு ஏறி இறங்கினார். அதிமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. 18 எம்.பி.க்களுடன் பிரதமர் வாஜ்பாயையே ஆட்டிப் படைத்தார் ஜெயலலிதா.

அன்று ஜெயலலிதாவிற்கு இருந்த துடிப்பு, ஜெயித்தாக வேண்டும் என்கிற வெறி, இன்று ஸ்டாலினிடம் இருக்கிறதா? என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும். கூட்டணிக் கட்சிகளை சர்வாதிகாரத்தாலோ, சாணக்கியத்தனத்தாலோ வென்றுவிட முடியாது. அன்பான அரவணைப்பு தான் அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் என்பதை அவர் சுதாரித்து புரிந்து கொள்வாரா?

இவர்களது ஆரோக்கியமான நட்பு அணுகுமுறை மட்டுமே ஊடலை தவிர்க்க முடியும்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close