கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரத்தை மையமாக வைத்து பொள்ளாச்சியில் கள் இறக்கும் விவசாயிகளை போலீசார் துன்புறுத்துவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 38 பேர் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட பகுதியில் சில விவசாயிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிலையிலும், தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் போலீசார் விவசாயிகளிடம் கள் இறக்குவதை நிறுத்த வேண்டும் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு சில விவசாயிகளை தீவிரவாதியை போல விசாரணை நடத்தியதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூறியதாவது; தங்கள் வாழ்வாதாரத்திற்கு கள் இறக்கி விற்பனை செய்கின்றனர். பூரண மதுவிலக்கு தேவை எனில் மதுபான கடைகளை மூடிவிட்டு எங்களிடம் அரசு கேட்கட்டும். மாநில அரசிடம் தவறை வைத்துகொண்டு விவசாயிகளை வஞ்சிப்பது நியமல்ல. இனி கள் இறக்கும் விவசாயிகளை போலீசார் தொந்தரவு செய்தால் பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு கள் இறக்கி விற்பனை செய்யும் முடிவை எடுக்க நேரிடும் என்று போலீசாருக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“