Pollachi Gang Rape Issue : பொள்ளாச்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பொதுமக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் ஒட்டு மொத்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருக்கின்றது.
இவர்கள் மீது உரிய காவல்த்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருவது மட்டுமன்றி போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்த கொடும் குற்றத்தை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றது கோவை காவல்துறை.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசாமி அரசினர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளி வரத் துவங்கியதில் இருந்து பல்வேறு பிரபலங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், குற்றமிழைத்த நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
கனிமொழி தலைமையில் இன்று மாலை திமுக பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த உள்ளது. திருவள்ளுவர் திடலில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாளை மறுநாள் (14/03/2019) கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Pollachi gang rape issue coimbatore and trichy students on protest