பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; ரூ.85 லட்சம் இழப்பீடு - கோவை மகளிர் கோர்ட் அதிரடி

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 2019ல் துவங்கிய இவ்வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 2019ல் துவங்கிய இவ்வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pollachi pollachi

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் குற்றவாளிகளை நேரில் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

Advertisment

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்ற செயல் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி டவுன் காவல் துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ டிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு சி.பி.ஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.  மேலும் ஹரன்பால், பாபு என்கின்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய நான்கு பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி தடயங்கள் அழிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 50 க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisment
Advertisements

சுமார் 200 ஆவணங்கள் 400 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்து உள்ளனர். 

pollachi pollachi

இந்த வழக்கில் ஒவ்வொரு வாய்தாவின் போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு வந்தனர். தற்பொழுது வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவு பெற்று உள்ளன. 

இதை அடுத்து கைதான 9 பேரிடம் சட்ட விதிகள் 313 கீழ் கேள்விகள் கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருநாவுக்கரசு உட்பட ஒன்பது பேர் கடந்த 5 ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் நீதிபதி ஆர் நந்தினி தேவி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்பொழுது ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. 

இதற்கு அவர்கள் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது இதன் பிறகு இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. 

இந்நிலையில் வழக்கின் விசாரணை கடந்த மாதம் 28 ஆம் தேதி மீண்டும் நடந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு சாட்சி விசாரணை குறுக்கு விசாரணை என அனைத்தையும் நிறைவு பெற்று விட்டதாகவும் மே 13 ஆம் தேதி வழக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். 

கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.  காலை 10.30 மணிக்கு மேல் இந்த வழக்கில் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். 

அதன்படி 9 பேரும் குற்றவாளிகள் எனக் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார்.  சுமார் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன், 376D கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டு உள்ளது, 3762N மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட  இரடும் வன்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை, உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்து உள்ளோம்.

அதில் குறைந்தபட்ச தண்டனையை 20 ஆண்டுகள் உள்ளன. 12 மணிக்கு தண்டனை விபரங்கள் வழங்கப்படும் என கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிசீலனையை வைத்து இருக்கிறோம். எதிர்தரப்பினர் என்ன கோரிக்கை வைத்து உள்ளனர் என கேட்கும் போது, 

இளம் வயதினர், குற்றவாளிகளுக்கு வயதான பெற்றோர்கள் உள்ளனர், குடும்பத்திற்கு ஒரே மகன் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். இதில் சிறப்பம்சம் எதுவும் இல்லை. இது இயல்பான அனைத்து தரப்பில் இருந்தும் வைக்கப்படும் கோரிக்கைதான். அரசு தரப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என நம்புகிறோம் என்று கூறினார். 

ரகசிய விசாரணை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கு எவ்வளவு சவாலானது என்ற கேள்விக்கு,  முதலில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படுகிறது, அதன்பிறகு 20 நாட்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு மாற்றப்படுகிறது, அதன் பிறகு 40 நாட்களில் சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்படுகிறது, மூன்று மாத காலத்திற்குள் மூன்று ஏஜென்சிகளுக்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ க்கு வழக்கு மாறியதும், எந்தப் பெண்ணும் இதில் புகார் கொடுக்க முன் வராததால், சி.பி.ஐ குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள்  அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் இருந்து 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை, அனைத்து பெண்களும் பயமின்றி சுதந்திரமாக வந்து சாட்சி சொல்லி இருக்கிறார்கள். 

வழக்கை நிரூபிப்பதற்கு மின்னணு கருவிகளின் சாட்சியங்கள், மிக முக்கியமானவையாக இருந்தது பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவே அதுதான் முக்கியமாக இருந்தது. வீடியோ எடுக்கப்பட்ட தேதி இடங்கள் அனைத்தும் தெளிவாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு  இருக்கிறது. 

சாட்சிகள் அளிக்கப்பட்டதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, அளிக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும், தரமான முறையில் ரெட்ரீவ் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு இருக்கிறோம். இது டெக்னிக்கல் சப்போர்ட், மிகவும் நன்றாக இருந்தது.  ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்விக்கு? 

அதுதான் உச்சபட்ச தண்டனையாக நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். நீதிமன்றம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்தார். பெண்களுடைய வழக்கு, இதே போன்ற பாலியல் வழக்குகளை உதாரணமாக உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக் கூறி இருக்கிறோம். இது போன்ற வழக்குகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, எங்கள் பக்கத்தில் இருந்து கடுமையான பாதங்களை வைத்து இருக்கிறோம்.

செய்தியையும் கடுமையான முயற்சி மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்று  நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை 
மகளிர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

ஆயுள் தண்டனை முழு விவரம்: 

A1 சபரிராஜன்- 4 ஆயுள் தண்டனை

A2 திருநாவுக்கரசர்- 5 ஆயுள் தண்டனை

A3- சதீஷ் மூன்று ஆயுள் தண்டனை

A4- வசந்தகுமார் இரண்டு ஆயுள் தண்டனை

A5 மணிவண்ணன் ஐந்து ஆயுள் தண்டனை

A6 பாபு ஒரு ஆயுள் தண்டனை

A7 ஹெரன்பால் மூன்று ஆயுள் தண்டனை

A8 அருளானந்தம் ஒரு ஆயுள் தண்டனை

A9 அருண்குமார் ஒரு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாக தண்டனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. சி.பி.ஐ யின் முயற்சி வீண் போகவில்லை. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைத்து உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமோ, அதற்கேற்ப பிரித்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்றார்.

கடைசி வாதத்தில், சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் வாதங்கள் நடைபெற்றதாகவும், விசாரணையில் பெறப்பட்ட அனைத்து சாட்சி மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றம் அவற்றை சரி பார்த்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அபராத தொகையானது குற்றவாளிகளின் தண்டனையை பொறுத்து ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிபதி தீர்ப்பின் போது எந்த மேற்கோள்களையும் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.

எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். அதனைப் பற்றி நாங்கள் தீர்மானிக்க முடியாது. 30 நாட்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. என்னை பொறுத்த வரை நீதிமன்றம் நல்ல முறையில் விசாரித்து பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தண்டனை நிலை நிறுத்தப்படும் என்று தான் நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையான சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்றார். ஒன்பது குற்றவாளிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகள் மற்றும் நிபுணத்துவ சாட்சிகள் இந்த வழக்கில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.


இந்த வழக்கு 8 தனித் தனி புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அனைத்தும் ஒரே சம்பவத்துடன் தொடர்புடையவை என்பதால் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டது.  தண்டனை விவரங்களை குறிப்பிட்ட அவர், சபரிராசனுக்கு நான்கு ஆயுள் தண்டனைகளும், திருநாவுக்கரசுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், சதீஷ்க்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளும், மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், பாபுவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ஹேரேன் பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதற்கு காரணம், அவர் ஐந்து பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தது தான் என்றும் அவர் விளக்கினார். இந்த வழக்கில் மகேந்திரா சாவ்லா வழக்கின் தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். 

சி.பி.ஐ விசாரணைக்கு வந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்றும், ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து கைதிகளும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறினார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: