பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பொள்ளாச்சி 21-வது தொகுதி ஆகும். தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம் என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சியில் வேளாண் தொழில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தேங்காய் வியாபாரம், இளநீர் வியாபாரம், தேங்காய் நார், பர்னிச்சர் உள்ளிட்ட தொழில்கள் பரவலாக உள்ளன. பொள்ளாச்சி அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்து வருகிறது. 1951 முதல் இதுவரை 18 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இதில் 1971-ம் ஆண்டு ஒரு முறை இடைத் தேர்தலை சந்தித்துள்ளது. அ.தி.மு.க இங்கு 7 முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க 5 முறை, காங்கிரஸ் 3 முறை, ம.தி.மு.க 2 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
கிட்டதிட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் கடந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றது. 1980க்குப் பிறகு 2019 தேர்தலில் தி.மு.க இங்கு வெற்றி வாகை சூடியது. பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம் 15,81,795 வாக்காளர்கள் உள்ளனர். இதில், பெண்கள் 8,15,428 பேர், ஆண் வாக்காளர்கள் 7,66,077 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 290 பேர் உள்ளனர். இது கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று என்பதால் இந்த தேர்தலில் இந்த தொகுதி கவனம் பெற்றுள்ளது.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கடந்த முறை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் 5,54,230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான சி. மகேந்திரன் 3,78,347வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் மூகாம்பிகை 59,693 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.
2014 தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சி. மகேந்திரன் 4,17,092 வாக்குகள் பெற்றார். கொ.ம.தே.க வேட்பாளரான ஈஸ்வரன் 2,76,118 பெற்று 2-ம் இடம் பிடித்தார். 2,51,829 வாக்குகள் பெற்ற தி.மு.கவின் பொங்கலூர் ந. பழனிசாமி 3-ம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அ.தி.மு.க மகேந்திரன் வெற்றி பெற்றார்.
2009 தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே. சுகுமார் 3,05,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.கவின் கு.சண்முகசுந்தரம் 2,59,910வாக்குகளும், கொ.ம.தே.கவின் பெஸ்ட் ராமசாமி 1,03,004 வாக்குகளும், தேமுதிகவின் கே. பி. தங்கவேல் 38,824 வாக்குகளும் பெற்றனர்.
2024 தேர்தல் வேட்பாளர்கள்
இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் ஈஸ்வர சுவாமி போட்டியிட்டுள்ளார்.
அ.தி.மு.க- கார்த்திகேயன்
பா.ஜ.க- வசந்தராஜன்
நாம் தமிழர்- மருத்துவர் நா.சுரேஷ் குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
ஜுன் 4: வாக்கு எண்ணிக்கை அப்டேட்ஸ்
ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இங்கு தி.மு.க-அ.தி.மு.க-பா.ஜ.க நேரடிப் போட்டியில் உள்ளன. சற்று நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரிய வரும்.
காலை 11.46 மணி நிலவரப்படி, பொள்ளாட்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 16,854 வாக்குகள் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்.
5 சுற்று முடிவு
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி ஐந்து சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி.கே, 43,435 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நான்கு சுற்றுகள் முடிவில் மொத்தம் திமுக 1,21,367 வாக்குகளும், அதிமுக 77,932 வாக்குகளும், பாஜக 54,939 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 14,419 வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9- வது சுற்று நிலவரம்
திமுக- 2,18,375
அதிமுக -1,35.109
பாஜக -100922
நாம் தமிழர் -25,753
திமுக 83,266 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த நிலையில், இறுதியாக வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி சுமார் 2,52,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
குறிப்பாக அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பொள்ளாச்சி தொகுதியில் திமுக 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 5,33,377 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் கார்த்திகேயன் 2,79,966 வாக்குகளுடன் 2-ம் இடம் பிடித்தார். அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 2,21,770 வாக்குகளைப் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.