Pollachi sex abuse cases transferred to CBI : பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன் என வீடியோ வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Pollachi sex abuse cases transferred to CBI
இந்நிலையில், தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கோபத்தையும், பதைபதைப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவானது, தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் நீதி கேட்டு, பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், மேலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு சில நாட்களிலேயே சி.பி.ஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் மூலம் சி.பி.ஐ விசாரணையைச் செய்யத் தொடங்கும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க : Pollachi Sexual Assault Live Updates : பொள்ளாச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதில் சந்தேகம் – திருமாவளவன்