பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ போலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்ப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

By: Updated: January 6, 2021, 04:48:18 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ போலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்ப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுது பணம் பறித்து வந்ததாக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதையடுத்து, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் பறித்ததாக பொள்ளாசியைச் சேர்ந்த சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என 4 பேர் கைது செய்யபட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரும் அப்போது சரணடைந்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தில் அதிமுகவினருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்ததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர்கள் மீது கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அவர்கள் 1 ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு, சபரிராஜனின் பெற்றோர்கள் குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

இந்த சூழலில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய சிபிஐ போலீசார் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (27), அதிமுக நிர்வாகி அருளானந்த (34) 3 பேரை செவ்வாய்க்கிழமை மாலை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அருளாணந்தம் அதிமுகவில் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் சிபிஐ போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் கைதானதையடுத்து, அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் பதவியிலியிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே. அருளானந்தம் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அருளானந்தம் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால், அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும் இவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Pollachi sex scandal case aiadmk party man arrested he sacked from aiadmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X