பொள்ளாச்சி விவகாரம்: அடித்து நொறுக்கப்பட்ட நாகராஜ் பார், மக்கள் ஆவேசம்!

நாகராஜின் பாருக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபாரை சூறையாடினார்கள்

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கிய நாகராஜ் என்பவரின் மதுபாரை பொதுமக்கள் இன்று அடித்து நொறுக்கினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஃபேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ளது. வீடியோ காட்டி பணம் பறிப்பதும், பாலியல் தேவைகளுக்கு அவர்களை பயன்படுத்துவதும் என இவர்கள் செய்த அட்டகாசம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க – Pollachi Sexual Abuse Case Live Updates: பொள்ளாச்சி வழக்கில் கந்துடைப்பு நாடகங்கள் வேண்டாம் : மு.க. ஸ்டாலின் கருத்து

இளம் பெண் ஒருவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அடுக்கடுக்காக கொடூரர்களின் கோர முகம் அம்பலமாகி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சபரிராஜன், (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க – ‘ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்’ – வைரல் ஆடியோ

இதனிடையே, புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க – அரசியல் பின்னணியா? நடந்தது என்ன? பொள்ளாச்சி கொடூரம்

நாகராஜூக்கு சொந்தமான மது பார் பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் சூளேஸ்வரன் பட்டி ஓம் பிரகாஷ் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று மதியம் அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபாரை சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

இதனால் மது குடிக்க வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் பார் நாகராஜூக்கும் தொடர்பு உள்ளது. அவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close