பொள்ளாச்சி கொடுமை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரிக்கபட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார். அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியில் பெயரை குறிப்பிட்டுள்ளது, இந்த நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம் ஆகும். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீதும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு புகார் அளித்ததாகவும், இருவரும் உயர் அதிகாரிகள் என்பதாலும், காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், கோவை மாவட்ட எஸ்.பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும், அவருக்கு எதிரான புகாரில் கோவை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மனுதரார் டி.ஜி.பிக்கு அனுப்பிய கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்தை நாட முடியாது எனவும் முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாட வேண்டும் என தெரிவித்தார். மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் நேரடியாக விசாரணைக்கு உத்தரவிட முடியும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி மனுதரார் முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி மனுதரார் நிவாரணம் பெறலாம் எனவும் அதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
read more : பொள்ளாச்சியை அதிர வைத்த செக்ஸ் வீடியோக்கள், அரசியல் தலைவர்களின் தொடர்புகள், போராட்டங்கள்
இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., பாண்டியராஜன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக மனுதரார்க்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.