pollachi video : பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து வீடியோ வெளியிட்டது பற்றி உரிய பதிலளிக்க வேண்டும் என நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரில் முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.