மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த 29-ம் தேதி தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின் சிலைகள் மற்றும் செப்பேடுகள் வைக்கப்பட்டிருந்த அறைகளை பார்வையிட்டு கோயில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்து பேசிக் கொண்டு இருந்தார். அவர் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததால் செய்தியாளர் ஒருவர் சுருக்கமாக பேசுமாறு கேட்டுக் கொண்டார். உடனே கோபம் அடைந்த பொன். மாணிக்கவேல் அந்த செய்தியாளரை நோக்கி, உங்களின் தாத்தா பெயர் என்ன?" என்று கேட்க, செய்தியாளர் அபூபக்கர் என பதிலளித்தார். தாத்தாவின் தாத்தா என்று கேட்டதற்கு தமீம் என அவர் கூறினார்.
உடனே அவருடைய தாத்தா பெயர் என்ன என்று பொன். மாணிக்கவேல் கேட்க முஜிபுர் ரஹ்மான் என செய்தியாளர் பதிலளித்தார். இதனை கேட்ட பொன்.மாணிக்கவேல் செய்தியாளர் பொய் சொல்கிறார் என சுற்றி இருந்தவர்களிடம் கூறினார். நான் பொய் எல்லாம் சொல்லவில்லை. ஆவணம் இருக்கிறது என்று செய்தியாளர் தெரிவித்தார்.
"எந்த ரெக்கார்டையும் காட்ட வேண்டாம். அதெல்லாம் உங்களிடம் இருக்காது. நீங்கள் சொல்வது பொய்" என்று பொன் மாணிக்கவேல் மீண்டும் கூறியுள்ளார். உங்களைப் பொறுத்தவரை இந்த கோயிலை பற்றி விசாரிக்க யோக்கிதை இல்லை. இது இந்து கோயில் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. பொன் மாணிக்கவேலின் இந்த செயலை பார்த்த அங்கிருந்த சக செய்தியாளர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி இவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொன் மாணிக்கவேலின் இந்த செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"சாதி, மதம் என அனைத்து வகையான வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர்களே பத்திரிகையாளர்கள். இந்த அடிப்படையே தெரியாத ஒருவர், காவல்துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பத்திரிகையாளரின் மதத்தை குறிப்பிட்டு, அவர் கேள்வி எழுப்ப "யோக்கியதை" அற்றவர் என்று கூறிய பொன் மாணிக்கவேலுக்கு கண்டனம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "காவல்துறை இந்த 'நடிகர்' மீது உரிய சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். 'நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“