“கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சினிமாவை எதிர்ப்பார்களா?” பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி

சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியில் தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தனியார் மருத்துவமனை ஈடுபட்டுள்ளது. அந்தத் தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான பிரசார வாகனத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் அவரிடம் காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு:

“மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் எந்தக் காலத்திலும் தமிழகத்திற்கு நன்மையே அளிக்கும்.
கர்நாடகம் தண்ணீர் தராமல் தந்திரமான நிலைகளில் இருந்து வருகிறது. அந்த நிலை இனி தொடராமல் இருக்க எனவே காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.”
என்றார்.

மேலும், கால அவகாசம் ஆனாலும் காவிரி பிரச்சினையில் நிரந்தமான தீர்வை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

பின்னர் காவிரி விவகாரத்தில் ஐபிஎல் போட்டிக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்த செய்தியாளர்கள் கேட்டபோது :

“ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டாம் என்று கூறுபவர்கள் சினிமாவை திரையிடக்கூடாது, சினிமா எடுக்கக்கூடாது என்றும் கூறுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக முடியும் என்ற நினைப்பில் வேல்முருகன் செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

×Close
×Close