கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பக் கூடிய கனிம வளங்களில் இருந்து பெருமளவு பங்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு சேர்கிறது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் செக்போஸ்டில் செய்த ஆய்வு வீடியோ டிராமா நடத்தியது போல் தெரிகிறது என்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் கள்ளச் சாராய மரண சம்பவம் நீண்ட காலத்திற்கு பிறகு நடந்துள்ளது. இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள், எஸ்.பி உள்ளிட்டோரை முதல்வர் சஸ்பெண்ட் செய்து உள்ளார். இதே அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டத்தில் பணியாற்றி உள்ளனர். அப்போது அங்கு எல்லாம் இந்த கள்ளச் சாராயம் விஷயம் ஏதும் இல்லை. இதை பார்க்கின்ற போது காவல் துறையினர் மீது தவறில்லை அதை கவனிக்க தவறிய காவல்துறையை கையாலழுகின்ற முதல்வரின் தவறு என்று குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் வேண்டாம்
தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு கேரளா உட்பட ஏனைய மாநிலங்களுக்கு அனுப்ப படுகின்ற வளங்களில் இருந்து பெருமளவு பங்கு இங்கே உள்ள ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு சேருகிறது. அதேபோன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது வெளியான வீடியோ அவர் டிராமா நடத்தியது போல் தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் பொய் பேசுவதை விட்டுவிட்டு, களப்பணியில் இறங்க வேண்டும். கனிம வளக் கடத்தலை தடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த அமைச்சர் இந்த மாவட்டத்துக்கு தேவை இல்லை என குமரி மாவட்ட மக்கள் போராடும் நிலை ஏற்படும். அதற்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும்" எனத் தெரிவித்தார்.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“