/indian-express-tamil/media/media_files/2025/09/25/pon-v-balaganapathy-bjp-ramanathapuram-tn-cm-mk-stalin-black-flag-protest-on-29th-september-tamil-news-2025-09-25-21-55-33.jpg)
"ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தி.மு.க சார்பில் வளர்ச்சி பணிக்காக ஒரு பிடி மண் கூட எடுத்து கொடுக்கப்படவில்லை." என்று பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதிதெரிவித்தார்.
இன்று பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பொன். பால கணபதி தலைமையில் ஏராளமானவர்கள் ரத்த தானம் வழங்கினர். இதன் பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பா.ஜ.க மாநில பொது செயலாளர் பொன்.பாலகணபதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "தி.மு.க கட்சி தேர்தல் வாக்குறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் மங்கலம் கண்மாய் மற்றும் ராமநாதபுரம் பெரியகண்மாய் ஆகியவற்றை சீரமைத்து தூர்வாரி தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் மீனவர்களுக்கு சிங்காரவேலன் மீனவர் நலத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மீனவர்களுக்கு சிங்காரவேலன் மீனவர் நலத்திட்டத்தின் கீழ் ஒரு வீடு கூட தி.மு.க அரசு கட்டிக் கொடுக்கவில்லை.
ஆனால், பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியின் கீழ் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதுடன், 2010 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்றுமதி சிறப்பு திட்டத்தின் கீழ் மிளகாய் மீன் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற குண்டு மிளகாய் மற்றும் மீன்கள் நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
மேலும் ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஒதுக்கீடு செய்வதில் சட்டமன்ற உறுப்பினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக தி.மு.க-வினருக்கு கடை ஒதுக்கியுள்ளார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மகன் மீது மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி நடைபெறவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தி.மு.க சார்பில் வளர்ச்சி பணிக்காக ஒரு பிடி மண் கூட எடுத்து கொடுக்கப்படவில்லை. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 29 ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ஜ.க சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.