ஃபீஞ்சல் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் புதுச்சேரியில் பல பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்த நிலையில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபீஞ்சல் புயலாக உருவெடுதுள்ளது. புயல் காரணமாக புதுவை கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இரவு முழுக்க அதிக வேகமான காற்றுடன் மழையும் விடாமல் புதுச்சேரியில் கொட்டியது.
புதுச்சேரியில் வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர் தொடங்கி நகரின் பல பகுதிகளிலும் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. ஏற்கெனவே நிவாரண முகாம்கள் நிரம்பிய நிலையில் பல குடியிருப்புகளில் தரைத்தளத்தில் இருந்தோர் மேல்தளத்துக்கு சென்றனர்.
புயலால் மரங்கள் ஜிப்மர் சாலை, செஞ்சி சாலை தொடங்கி பலபகுதிகளில் விழத்தொடங்கியது. இதை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பொழிவு இருப்பதால் பலரது வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், மழை தொடர்வதாலும் வெள்ளநீர் வடிவதில் சிரமம் உள்ளது. தொடர் மழையால் புதுச்சேரி முழுக்க கடைகள் மூடப்பட்டுள்ளன. நகர் முழுக்க வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் முகாம் தேவை அதிகரிப்பால் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளி கல்லூரிகளை மக்கள் தங்க திறந்து வைக்குமாறு ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“