பொங்கல் திருநாளில் திமுக தொண்டர்களை சந்திக்கிறார், கருணாநிதி. இதையொட்டி சென்னை, கோபாலபுரத்தில் அவரது இல்லம் விழாக்கோலம் பூணுகிறது.
பொங்கல் திருநாள், தமிழ் மக்களின் தனிப் பெரும் திருநாள்! உழவர்களின் திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை பறைசாற்றும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும், தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாட திமுக ஆட்சி காலத்தில் சட்டம் இயற்றியவர் கருணாநிதி. ஒவ்வொரு ஆண்டும் பொங்கள் திருநாளை தொண்டர்கள் புடைசூழ உற்சாகமாக கொண்டாடுவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார்.
பொங்கல் திருநாளன்று கோபாலபுரத்தில் தன்னை சந்திக்கும் தொண்டர்களுக்கு தலா 10 ரூபாய் வழங்குவதையும் வாடிக்கையாகா வைத்திருந்தார் அவர். கடந்த ஆண்டும் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த நடைமுறை இல்லை.
கருணாநிதியின் உடல்நிலை சமீப காலமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அண்மையில் ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர் கோபாலபுரம் இல்லத்தின் வாசல் வரை அழைத்து வரப்பட்டு தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இந்த ஆண்டு பொங்கல் திருநாளிலும் அவரை சந்திக்க தொண்டர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காலை 11 மணிக்கு கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. வழக்கமாக தொண்டர்களுக்கு தலா 10 ரூபாய் வழங்கும் கருணாநிதி சார்பில் இந்த முறை தலா 50 ரூபாய் வழங்கப்படும் என்கிறார்கள். கருணாநிதிக்கு பூச்செண்டு, சால்வைகள் கொடுப்பது ஆகியவை அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு தடை செய்யப்படுகிறது. 15 மாதங்களுக்கு பின்பு தொண்டர்களை கருணாநிதி நெருக்கமாக சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி, திமுக தொண்டர்களை சந்திக்க இருப்பது குறித்து இன்று (ஜனவரி 13) திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘மருத்துவர்கள் ஆலோசனைப்படியே அதில் முடிவு செய்யப்படும்’ என்றார். பெருமளவில் தொண்டர்கள் திரள்வதை தவிர்க்கவே முன்கூட்டியே திமுக சார்பில் அதிகாரபூர்வமாக இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். (படம்)