இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும் : கவர்னர் - தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் விழாவை கொண்டாடும் தமிழ் மக்கள் வாழ்வில் சிறக்க வேண்டுமென்றால் விவசாயத்தொழிலையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை தருணத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் ஒரு அறுவடை திருநாள். அது நமது குடும்பங்களுக்கு அளப்பரிய, அபரிமிதமான மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கிறது.

தை மாத தொடக்கம் நமக்கு இயற்கையின் ஆசீர்வாதங்களையும், அறுவடையையும் வாரி வழங்குகிறது. அதற்காக இந்த நல்ல நாளில் நமது பிரார்த்தனைகளையும், நன்றியையும் தெரிவிப்போம்.

பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சி கொண்டாட்டம் அற்புதமான இயற்கை வழிபாடு பாரம்பரியத்தையும், தொன்று தொட்டுவரும் நமது பழக்க வழக்கங்கள் மற்றும் மிகப்பெரிய தமிழ் கலாசாரத்தையும், சந்தோசத்துடனும், பெருமையுடன் வழங்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து மடல் வருமாறு:

​எத்தனையோ விழாக்கள் வருகின்றன. மகிழ்ச்சி தருகின்றன. எனினும், பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியுடன், பெருமிதமும் கலந்திருக்கிறது. காரணம், இது தமிழர்களின் தனித்துவமான விழா. தமிழர் திருநாள் என்பதுடன், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் இதயபூர்வ நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் நன்னாளை, தமிழினத்தின் ஆதிப் பழம்பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக, பண்பாட்டு மடை மாற்றம் ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.

கழகத்தினரைப் பொறுத்தவரை, பொங்கல் விழா என்பது தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு திராவிட இனத்தின் பண்பாட்டுத் திருவிழா. அந்த உணர்வுடன்தான் அன்றுதொட்டு இன்றுவரை பொங்கல் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.

​இந்தப் பொங்கல் நன்னாளில், கழகத்தின் பொதுச்செயலாளர் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் அன்புக்கட்டளை ஒன்றை விடுத்திருக்கிறார். தமிழர் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் இணைத்துக் கொண்டாடும் கழகத்தினர், இரு வண்ணக் கொடியாம் நம் கழகக் கொடியை உயர்த்திட வேண்டும் என்பதே பேராசிரியர் அவர்கள் விடுத்துள்ள அன்புக் கட்டளை.

எனவே, பொங்கல் திரு நாளை தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி, பண்பாட்டு மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த கழகத்தையும் தலைவர் கலைஞரையும் மறவாமல், வட்டங்கள் தோறும் வீடுகள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிடுவோம்.

காற்றில் அந்தக்கொடி அசையும்போது தமிழ் உணர்வு நம் நெஞ்சமெல்லாம் பரவி நிறையட்டும்! தமிழ் நிலத்தைக் காக்கவும், தமிழினத்தை மீட்கவும் தமிழ் மொழிப்பெருமைகளைப் போற்றவும், அடுத்தடுத்து கழகம் பெறவிருக்கும் வெற்றிக்குக் கட்டியம் கூறுவது போல கழகக் கொடிகள் உயரட்டும்.

இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும். இருவண்ணக் கொடி பறக்கட்டும். ​அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தி வருமாறு :

இன்று நமது இளைஞர்களோடு சேர்ந்து நமது மோடி அரசு மீட்டெடுத்த ஜல்லிக்கட்டோடு பொங்கல் நடைபெறுவதே நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.கரும்புக் கட்டோடு கொண்டாடும் இந்த விழாவிற்கு காரணமான விவசாயிகளின் பயிரும் காப்பாற்றப்பட வேண்டும், உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் நதிகள் இணைத்து நாடு முழுவதும் செழிக்க இந்த பொங்கல் வழிவகை செய்யட்டும்.

நாடு முழுவதும் செழிக்க தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழர் திருநாளில் செழித்தோங்க வேண்டும். லஞ்சம் ஒழிந்து, வறுமை ஒழிந்து வாழ்க்கை செழிக்க அன்புடன் வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் விடுத்த பொங்கல் வாழ்த்துச் செய்தி:

Pongal 2018, TN Governor, MK Stalin, Leaders Greetings

திருநாவுக்கரசர்

உலகெங்கும் வாழும் தமிழர்களாலும், தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களாலும், சாதி, மதம், மொழி வேறுபாடின்றி உள்ளப்பூரிப்புடன் உவகையோடு கொண்டாடப்படும் விழா பொங்கல் விழாவாகும். இத்திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு பல காலமாய் தமிழர் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இவ் உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : கடந்த சில ஆண்டுகளாக உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கை கண்ணீர் வெள்ளம் ஆயிற்று. உழுது பயிரிட்டு உலகத்திற்கு உணவு அளித்த விவசாயிகளின் விம்மல்கள் தணியவில்லை; பெருகிற்று. வெள்ளத்தால் புரண்டோடி வந்த நதிகளின் வெள்ளத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த தண்ணீர் உரிமையை, அண்டை மாநிலங்கள் தடுக்கின்றன. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கே துரோகம் இழைக்கிறது.

Pongal 2018, TN Governor, MK Stalin, Leaders Greetings

வைகோ

எத்தனை சோதனைகள், வேதனைகள் சூழ்ந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் நலன்களைக் காக்கவும், பணநாயகத்திலிருந்து விடுவித்து, ஜனநாயகத்தைக் காக்கவும் தமிழக மக்கள் உறுதிகொள்ள வேண்டும்.
இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:

பொங்கல் விழாவை கொண்டாடும் தமிழ் மக்கள் வாழ்வில் சிறக்க வேண்டுமென்றால் விவசாயத்தொழிலையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்பது ஆளும் ஆட்சியாளர்கள், அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் ஆகிய அனைவருக்கும் உள்ள தலையாய கடமையாகும்.

குறிப்பாக தமிழ் மக்களின் அடிப்படைத்தேவையை முழுமையாக நிறைவேற்றவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை வகுத்து நிறைவேற்றி, செயல்படுத்தி, தமிழகத்தை வளமான பாதையில் கொண்டு செல்லவும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எனவே இப்பொங்கல் திருநாள் முதல் தமிழகத்தில் இனிமேல் நல்லதே நடக்க வேண்டும்; தீயவை ஒழிய வேண்டும்; நிச்சயமற்ற தன்மை நீங்க வேண்டும். தமிழர்களின் இல்லம் தோறும் பொங்கல் பொங்குவது போல், மகிழ்ச்சி பொங்க வேண்டும்; மங்கலம் பெருக வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நெடிய மரபுவழி நம்பிக்கை. மனித உரிமைகள் பறிப்பு, மத்தியில் அதிகார குவியல், மக்கள் நல்லிணக்கத்தை சிதைக்கும் மதவெறி பேச்சுக்கள், அறிவியலுக்கு பொருந்தாத சாதி எனும் தப்பெண்ணம் ஒரு பக்கம் செல்வகுவியல், மறுபக்கம் ஏழ்மை எனும் நிலைமாறி ஒரு சமதர்ம சமூகம் நோக்கி நடைபோட பொங்கல் திருநாளில் சபதமேற்போம். இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close