Pongal 2022 TASMAC liquor sales hit Rs 358 crores in last 2 days : பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். 15ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் செயல்படாது. அதே போன்று கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 16ம் தேதி அன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் மதுபானங்கள் விற்பனை டாஸ்மாக் கடைகளில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் மற்றும் இதர கொண்டாட்ட நாட்களின் போது மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் மட்டும் மொத்தம் ரூ. 358.11 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி அன்று 155.06 கோடிக்கும், 13ம் தேதி அன்று 203.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தில் ஞாயிறுகளில் ஊரடங்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் தைப்பூசம் அன்றும் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 147 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றது. கடந்த வாரம் ஞாயிறு அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 8ம் தேதி அன்று ரூ. 218 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வாரத்திலும் டாஸ்மாக்கில் விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தமாக மூன்று நாட்கள் விற்பனை எவ்வளவு மற்றும் மண்டல வாரியாக எத்தனை கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் விடுமுறையின் போது ரூ. 589 கோடிக்கு டாஸ்மாக்கில் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"