Advertisment

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகைக்கு உலகத் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
news in tamil covid news

news in tamil covid news

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு உலகத் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...

முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கம், இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரி, குளங்கள் நிரம்பி உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உங்களின் வாழ்வு வளம்பெற பல்வேறு நலத்திட்டங்களை இவ்வரசு தொடர்ந்து வழங்கும். உங்கள் அனைவருக்கும் எனது இனிய தை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தனிச்சிறப்பு மிக்க தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழாவை உலகெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும் கழகம் சார்பில், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு, உழவர் திருநாள், வள்ளுவப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

“நித்திரையில் இருக்கும் தமிழா

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு!

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு” - என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் திருவள்ளுவராண்டு தொடக்கமான தமிழ்ப்புத்தாண்டு, தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அதுவே தமிழர்களது வாழ்க்கையை வளப்படுத்தும் உற்சாக மொழியாக இருக்கிறது.

தை மாதம் என்பது அறுவடைக் காலம். மக்களைக் காப்பாற்ற நெல்மணிகளை வழங்குகிறது நிலம். புத்தரிசி கொண்டு புதுப்பானையில் புதிதாக்கப்பட்ட வீட்டில் ‘பொங்கலோ பொங்கல்' என்று உள்ளமும் உதடும் மகிழ்ச்சி பொங்க, பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் உன்னதமான பண்பாட்டு விழா தான் பொங்கல் திருநாள்.

“சகோதரத்துவம் தழைக்க சமத்துவப் பொங்கலைச் சமைப்போம்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாதி, மதப் பாகுபாடு இல்லாத தமிழர் திருநாள் அது. தை முதல்நாள் இயற்கையை வணங்கும் பொங்கல் திருநாள்.

மறுநாள் மனிதர்களுக்காக உழைக்கும் மாட்டுச் செல்வங்களுக்கான திருநாள். அதுவே இந்த மானுடத்துக்கு அறத்தை வலியுறுத்திய திருவள்ளுவர் திருநாள். தமிழர்களுக்கு இதனை விட உற்சாகம் தரக்கூடிய திருநாள் வேறு ஏது? தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தி.மு.க அரசு தான், தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதையும் சட்டமாக்கியது.

பொங்கலுக்கு அடுத்தநாளை திருவள்ளுவர் நாள் என அரசு உத்தரவாக அறிவித்ததும் கலைஞர் அரசே! திருவள்ளுவர் ஆண்டு முறையையும் ஏற்றது கலைஞர் அரசே! அந்தளவுக்கு தமிழர் ஆட்சியை நடத்தியது தி.மு.க.

அத்தகைய தமிழர் ஆட்சியை மீண்டும் உருவாக்கும் நமது கொள்கைப் பயணத்தில் இந்த தைப் பொங்கலும் வருகிறது.

சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணர்வைப் பெறும் வகையில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். மனித சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மறையச் செய்வோம். இயற்கையையும் பிற உயிரினங்களையும் காப்போம். வள்ளுவமே நம் தமிழ்நெறி என முழங்குவோம்!

இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றுவோம். பொங்கலைக் கொண்டாடுவோம். புத்துணர்வு பெறுவோம்.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாள், வள்ளுவப் பெருநாள் வாழ்த்துகள்!” என்று மு.க.ஸ்டாலி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “நமது பாரம்பரிய பண்பாட்டின் அம்சமாக இருக்கிற பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய தமிழ்ச் சமுதாயம் இன்றைக்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகிற வகையில் இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

இன்று தமிழ் மக்கள் படுகிற துன்பத்தில் இருந்து விடுபட்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதே தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாகும். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். தை பிறந்து விட்டது. தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற பொங்கல் திருநாளில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “வேளாண் பெருங்குடி மக்கள், தாங்கள் உயிராகப் போற்றும் நிலத்திற்கும், கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றி பாராட்டுகின்ற வகையில், தை பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அவர்கள் மட்டும் அல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து தமிழர்கள் அனைவரும் கொண்டாடுகின்றார்கள்.

எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப் பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம்.” என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “தை தீர்வுகளின் மாதம் ஆகும். அதனால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கும், தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கும் இந்த ஆண்டு தைத்திருநாள் தீர்வுகளை வழங்கும்.” என்று கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “மதசார்பற்ற ஒரேவிழா தமிழர் திருநாள்தான் என்றும்

தமிழினத்தின் பெருமைமிகு தனிப்பெரும் திருவிழாவாம் பொங்கல் திருநாளில் உலகத் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “தை பொங்கல் சாதி, மதம் கடந்த திருநாள். இயற்கையையும், உழைப்பையும் போற்றுகிற உழவர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம்’ என்ற உறுதியோடு அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின் நியதி என்பது போல் கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பது மக்கள் வாழ்வில் நல்லவையாக இருக்கட்டும். இந்த பொங்கல் திருநாளை பெற்றோர்களுடனும், குழந்தைகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உறவாடி மகிழ்ந்து கொண்டாட வேண்டும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,

தை முதல் நாளில், “பொங்கலோ…பொங்கல் என்று சொல்லி பூரிப்படையும் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கட்டும். தமிழகத்திற்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாள் வழிகாட்டட்டும். என் பேரன்புக்குரிய தமிழக மக்கள் அனைவரின் இல்லங்களிலும் ஆனந்தமும், ஆரோக்கியமும் தழைத்தோங்கட்டும் என வாழ்த்துகிறேன்.” என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Mk Stalin Pongal Pongal Festival Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment