சென்னை:
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பொருட்களும், பண்டிகைக்கான நிதியும் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பொருட்களுடன் ரூ 2500 நிதி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு்ளளது.
மேலும் டோக்கன் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும், இதற்கான டோக்கன் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று வழங்கப்பட்டு, ஜனவரி 04-ந் தேதிமுதல் பொருட்கள் மற்றும் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் பெற்றவுடன் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சுயநலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஊதிய உயர்வு கொடுக்க காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசு வரும் ஜனவரி 4-ந் தேதிக்குள் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் பொங்கல் பரிசு விநியோகிப்பதை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரேஷன்கடை ஊரியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் கூறுகையில்,
ரேஷன் கடை ஊழியர்கள் பல ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடி வருகிறோம். இதற்காக அமைக்கப்பட்ட குழு, ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இதை கண்டுகொள்ளதா அரசு பொங்கல் பரிசுக்காக 560 கோடி ரூபாய் ஒதுக்கி அதை ரேஷன் கடை ஊழியர்களை வைத்தே பொதுமக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ரேஷன்கடை ஊழியர்களுக்கும் (கடந்த 31.3.2020) கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கும் கடந்த (31.10.2020) ஊதிய உயர்வு அளிக்கும் காலக்கெடு முடிவடைந்துள்ளது. ஆனாலும், கூட்டுறவு ரேஷன் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஜனவரி 4ம் தேதிக்கு முன்னரே கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், பொங்கல் பரிசு வழங்காமல், புறக்கணிக்கவும், அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து பேசி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால் தமிழகத்தில் பொங்கல் பரிசு திட்டமிட்டபடி வழங்கப்படுமா என்பது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.