தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை, சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை அருகில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை தொடங்கி வைத்தார். கடந்த வாரம் தமிழகம் முழுவதும், டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடக்கூடிய வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான பச்சரிசி, சர்க்கரையை தமிழக நுகர்பொருள் வாணிப கழகமும் கரும்பை கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்துள்ளன.
இவை தமிழ்நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டோக்கன்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி மூன்றாம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது வரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்களை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனில் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
டோக்கன் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளவும் அறிவுறத்தப்பட்டது.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார். சின்னமலை அருகில் உள்ள டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் இன்று காலை குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பினை விநியோக்கித்தார்.
அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ஜனவரி 13 வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.