பொங்கல் பண்டிகை நாளை ஜன.14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் ஜன.15-ஆம் தேதியும், காணும் பொங்கல் ஜன.16-ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது. இந்தாண்டு, ஜன.17-ஆம் தேதியன்றும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதைத் தவிர வழக்கமான ஜன.18,19 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களும் விடுமுறை நாளாக அமைந்துள்ளது. எனவே, சென்னையில் வசிக்கும் திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாட வாகனங்களில் புறப்படத் தொடங்கினா்.
சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கள்ளக்குறிச்சி, சேலம் வழியாக மேற்கு மாவட்டங்களுக்கும் செல்லும் வாகனங்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை காட்டிலும் அதிகமாகவே காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூா் அருகிலுள்ள ஆத்தூா் சுங்கச் சாவடியிலும், விக்கிரவாண்டி சுங்கச் சாவடியிலும் அனைத்து வழிகளும் திறந்துவிடப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால், இந்த சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படவில்லை. சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களுக்கும் சென்ற வாகனங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மட்டுமல்லாது, செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிந்து, விழுப்புரம் மாவட்ட எல்லையிலும், பெரம்பலூர் திருச்சி மாவட்ட எல்லையிலும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர் வாகன நெரிசலால் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இதனால், மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர் வாகன நெரிசலால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை பார்க்க முடிந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல்.