பொங்கல் சிறப்பு பஸ்கள்: சென்னையில் இருந்து புறப்படும் இடங்கள் அறிவிப்பு

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

By: January 8, 2020, 7:57:35 AM

Special Buses For Pongal Festival : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 30,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், சென்னை மாநகர போலீஸ் இணை கமிஷனர் (போக்குவரத்து) ஜெயகவுரி மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,225 பஸ்களுடன், சிறப்பு பஸ்களாக 4,950 பஸ்கள் சேர்த்து, சென்னையில் இருந்து மொத்தம் 16,075 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

ஜே.என்.யூ போராட்டத்தில் தீபிகா படுகோன் நேரில் பங்கேற்றார்

சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களின் கவனத்துக்கு

அதேபோல் பிற ஊர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களை சேர்த்து தமிழகம் முழுவதும் 30,120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் நெல்லைக்கு 602 பஸ்கள் இயக்கப்படும். சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள், கே.கே.நகர். பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சை, விக்கிரவாண்டி, பண்ருட்டி, தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்களும், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்களும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்களும் இயக்கப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்களும், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்களும் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படும்.

முன்பதிவு செய்த பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டசாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்ய கோயம்பேட்டில் 15 மையங்களும், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லியில் தலா 1 என மொத்தம் 17 முன்பதிவு மையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை செயல்படும்.

பொங்கலுக்குப் பின்

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்பி வர வசதியாக 16-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கலுக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இருந்து திருப்பூருக்கு 1,200 பஸ்களும், கோவைக்கு 1,525 பஸ்களும் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பின்பு சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் நெல்லையில் இருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விரைவாக செல்வதற்காக சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: சேவைகள் பாதிக்கப்படுமா?

புகார் தெரிவிக்க

பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிக்கவும் 94450-14450, 94450-14436 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ஏற்கனவே உள்ள முன்பதிவு மையங்கள் மூலம் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 42,120 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 23,535 பயணிகளும் ஆக மொத்தம் 65,655 பயணிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.3.48 கோடி வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலம் ரூ.22 கோடியே 94 லட்சம் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு 8 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பஸ் புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்களும் பயணிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது” என்றுக் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Pongal special 30000 buses tamil nadu government announced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement