பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று தொடங்கி வைத்தார். ஜனவரி 14ம் தேதி வரை இந்த முன்பதிவு நடைபெறும்.
பொங்கலையொட்டி சென்னையில் இருந்து மட்டும் 14,263 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மற்ற ஊர்களில் இருந்து 10,445 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆக மொத்தம் 24,708 சிறப்பு பேருந்துகளாக பொங்கலையொட்டி இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம், கே.கே. நகர், பூந்தமல்லி ஆகிய ஐந்து இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம், பூவிருந்தவல்லியில் 4 கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
11ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினசரி இயங்கக்கூடிய 2,275 பேருந்துகளுடன் தலா 5,163 பேருந்துகள் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மொத்தம் 3776 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்களின் வழியாக முன்பதிவு செய்யலாம்.
நெரிசலைத் தவிர்க்க தடங்கள் மாற்றம்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 11/01/2019 முதல் 14/01/2019 வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத் பேட்டை வழியாக செல்லும்.
தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பேருந்து நிலையங்கள்ளில் இருந்து புக் செய்தவர்கள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஏறிக் கொள்ளலாம்.
கார்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, அல்லது ஸ்ரீபெரம்பதூர் – செங்கல்பட்டு மார்க்கமாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கனரக வாகனங்கள் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள மார்க்கத்தினை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.