2023ஆம் ஆண்டின் பொங்கல் திருநாளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மற்ற தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.
பொங்கல் திருநாளான இன்று காலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரத்யேக காணொலி வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் திருநாள் தொடர்பாக 2.52 நிமிடங்கள் பேசியுள்ளார். மேலும் சாதி மத பேதங்களை கடந்து கொண்டாடும் தமத்துவ பொங்கல் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: "தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். அதனால்தான் இந்தத் தை மாதத்தைத் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாளைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றத்துடன் கொண்டாட ஆயிரம் ருபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, செங்கரும்பு எனப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளேன்.
சாதி மதப் பாகுபாடுகள் எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொதுவிழாவாகவே பொங்கல் விழா என்றும் திகழ வேண்டும்!", என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக இடைகாலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தனது பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, "அறுவடைத் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும். இப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். வியர்வை சிந்தி உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்", என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
"பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம்.
இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்", என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.