Advertisment

இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் - ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் ஆண்டு இது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pongal wishes

பொங்கல் பண்டிகை: மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் ஆண்டு இது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisment

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் தைப் பொங்கல் பண்டிகையை திங்கள்கிழமை (15.01.2024) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் ஆண்டு இது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் தாய்த்தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். ஆண்டுக்கொரு நாள் அறிவுமிகு திருநாள், பொங்கல் புதுநாள், நமக்கென்றுள்ள ஒப்பற்ற விழா, இதற்கு ஒப்பான விழா உலகில் எங்குமில்லை என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். 

களம் காண்பான் வீரன் என்றால், நெற்களம் காண்பான் உழவன் மகன். போர் மீது செல்லுதலே வீரன் வேலை, வைக்கோற் போர் மீது உறங்குதலே உழவன் வேலை. பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்க, நாற்று முடிபறித்தல்  உழவன் நோக்கம், உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. வேற்றுமையோ ஒன்றே ஒன்று. உழவன் வாழ வைப்பான். வீரன் சாக வைப்பான் என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” இது வள்ளுவர் வாக்கு.     

உழவு என்பது தமிழர்களுடைய தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு, அதனால்தான், தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக, தமிழர் பெருநாளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். 

கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிகுரியதாக தமிழ்நாட்டில் தி.மு.க-வின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லத்தக்க வகையில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டக்களை செய்துகாட்டியும் சாதனைகளுடைய பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு விடியல் பயணம் முதல், கொரோனா காலத்தில் எல்லா குடும்பங்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய், இப்போது வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் 1,000 ரூபாய், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக செப்டம்பர் மாதம் முதல் 1 கோடி பேருக்கு மேல் மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்குகிறோம். பெரும் நிதி நெருக்கடிக்கு இடையில் பொங்கல் தொகுப்புடன், பரிசுத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கி கோடிக் கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை பொங்க வைத்திருக்கிறது நம்முடைய அரசு. பால் பொங்குகிற மாதிரி கோடிக் கணக்கான மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கின்றேன். உங்கள் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. உங்களுடைய மனசிலே ஏற்படுகிற சிரிப்புதான் என்னுடைய பூரிப்பு, என் பேரன்பிற்குரிய தமிழினத்தினுடைய உடன் பிறப்புகளே, அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க ஊரே பொங்கட்டும், இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப்போகிற ஆண்டு இது. அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ந்திடும் வேளையில், ஆட்சி மாற்றத்திற்காக சூளுரைப்போம் - வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பொங்கல் விழாவினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது. பேரறிஞர் அண்ணாவின் உயிர்நிகர் லட்சியங்களான மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து வரும் மோடி தலைமையிலான மக்கள் விரோத பா.ஜ.க தன் ஆட்சியைத் தக்கவைக்க மீண்டும் களத்தில் நிற்கிறது. திராவிட மாடல் ஆட்சியினை திறம்பட நடத்தி வரும் தி.மு.க-வுடன் இண்டியா கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்துக்காக நாடு தழுவிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் பொங்கல் விழாவினை நாம் கொண்டாட இருக்கிறோம். பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்திடும் அதே வேளையில், ஆட்சி மாற்றத்திற்காகவும், நாம் சூளுரைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

தடைகளையெல்லாம் தைத் திருநாள் தகர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயம் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினாலும், அரசின் காதுகளில் அது விழவில்லை; வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி இரு ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வார்த்தை அளவில் சமூகநீதி பேசும் ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. இந்தத் தடைகளையெல்லாம் தைத் திருநாள் தகர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அது நிச்சயம் நிறைவேறும்.” என்று தெரிவித்துள்ளர்.

மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம் - கே. பாலகிருஷ்ணன் 

இந்திய கம்யூனிஸ் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைத்துள்ள இண்டியா எனும் அணி சேர்க்கையின் வெற்றிப் பயணம் துவங்குகிற நன்னாளாக; அதன்மூலம் 2024 தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வலுப்பட; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட; மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும் - கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: வருகிற ஜனவரி 14 அன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கவிருக்கிறார். இந்தப் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பா.ஜ.க ஆட்சி அகற்றப்படுவதற்கான தீவிர முயற்சியாக அவரது பயணம் அமைய இருக்கிறது. ராகுல் காந்தியின் பயணம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன். அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை வீழ்த்தி ஜனநாயகத்தை வென்றெடுக்க உறுதியேற்போம் - திருமாவளவன்

வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறிருப்பதாவது: உழைப்பைப் போற்றும் திருவிழாதான் தமிழர்கள் போற்றும் தமிழினத்தின் பொங்கல் திருவிழாவாகும். இந்நாளில் தமிழக மக்கள் ஓர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. அதாவது, நடைபெறவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை வீழ்த்தி ஜனநாயகத்தை வென்றெடுக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் உறுதியேற்போம்.

தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும் - ஓ. பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப, தமிழகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும் என்று வாழ்த்தி, எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அனைவரும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் - ஜி.கே. வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில ஆட்சியாளர்கள், பொது மக்கள் என அனைவரும் விவசாயத்தொழிலைப் பாதுகாக்க, மேம்படுத்த, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தெய்வீகத்தை, உழைப்பை, விவசாயத்தை, அன்பை வெளிப்படுத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இயற்கையை காப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரைகள் தைப்பொங்கல் கொண்டாங்களின் அங்கங்களாக மாற்றப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். பொங்கல் திருநாளில் இயற்கையை வணங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும். பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் இயற்கையை காக்க வேண்டியன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஒன்றாக இருக்க வேண்டும். பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது இயற்கை தான், அத்தகைய இயற்கையை காப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரைகள் தைப்பொங்கல் கொண்டாங்களின் அங்கங்களாக மாற்றப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: சாதி, மத வேறுபாடுகளை களைந்து அனைவரும் சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை இப்பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பழந்தமிழர் அறச்சிந்தனை - பெரியாரிய - அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியம் படைக்க உறுதி ஏற்போம் - தி. வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: வர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை - பெரியாரிய - அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவத்தை படைக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Happy Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment