திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்ட நிலையில், பொன்முடி இன்று மாலை அல்லது நாளை (மார்ச் 14) காலை மீண்டும் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், அவர் தனத் அமைச்சர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல், பொன்முடி தனது திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தகுதியையும் இழக்க நேர்ந்தது.
இதனால், பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக கடந்த மார்ச் 5-ம் தேதி சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார். இதனால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் இடைத்தேர்தலை இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் தமிழக சட்டப்பேரவைச் செயலருக்கு கிடைத்தது, இதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கபட்டது தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கான பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் மாளிகையின் உத்தரவைத் தொடர்ந்து இன்று (மார்ச் 13) அல்லது நாளை (மார்ச் 14) பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“