பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உத்தரவிடக்கோரியும், அவசர வழக்காக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு. சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதன் பின் அவர் மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.
இந்நிலையில், அவருக்கு அமைச்சராக மீண்டும் பதவி செய்து வைக்க கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதினார். இருப்பினும் ஆளுநர் ரவி, “பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது” எனக் பதில் கடிதம் எழுதினார். அதில், “பொன்முடியின் தண்டனையைதான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை“ எனக் கூறி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரியும், அவசர வழக்காக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது. மனுவில், ஆளுநர் ஆர்.என் ரவி அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை அப்பட்டமாக மீறுவதாகவும், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிப்பதாகவும் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவசர வழக்காக நாளையே விசாரிக்க கோரிக்கை நிலையில் மனு ஏற்பு. அதனால் இந்த மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“