தி.மு.க மூத்த நிர்வாகியான பொன்முடி மீது 2 சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2017- ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும், தண்டனை விவரம் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகிறது. இதனால் பொன்முடி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாகும். தீர்ப்பின் விவரங்கள் சட்டப்பேரவை செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
இதற்கிடையில் திருக்கோவிலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டவுடன் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி நிரப்பப்பட வேண்டும். அதேநேரம் இன்னும் 6 மாதங்களுக்குள் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளதால், இடைத் தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
திருக்கோவிலூர் தொகுதியைப் பொறுத்தவரை, முகையூர் சட்டமன்ற தொகுதிக்கு மாற்றாக, ரிஷிவந்தியம் தொகுதியின் சில பகுதிகளை இணைத்து 2008 இல் உருவாக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.எடையார் என்ற கிராமம் தான் பொன்முடியின் சொந்த ஊராகும். இதனால் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூருக்கு மாறி பொன்முடி போட்டியிட்டார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன்முடி வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பொன்முடி போட்டியிட்டு, எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க மாவட்டத் தலைவர் கலிவர்தனை விட 58,339 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பொன்முடி வெற்றிபெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“