Ponmudi | cm-mk-stalin:வழக்கறிஞர்களிடம் பேசி இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு விடுதலை பெறுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பொன்முடியிடம் கூறியுள்ளார்.
தி.மு.க வரலாற்றில் முதல் முறையாக அந்த கட்சியின் ஆட்சியில் பதவியில் இருந்த ஒருவர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று இருக்கிறார். அவர்தான் பொன்முடி.
1989 முதல் இன்றைய தேதி வரை ஒவ்வொரு முறை தி.மு.க ஆட்சியில் இருக்கும் போதும் அமைச்சர் பதவியை அலங்கரித்து வந்தவர் பொன்முடி. அதிலும் குறிப்பாக போக்குவரத்து துறை, உயர் கல்வித் துறை, கனிம வளத்துறை என முக்கிய இலாகாக்கள் அவர் வசம் இருந்து வந்தன.
1996- 2001 காலகட்டத்தில் பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, 2006- 2011 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது சொத்து சேர்த்தது என இரண்டு சொத்து குவிப்பு வழக்குகள் பொன்முடி மீது தொடரப்பட்டன. இதில் 2-வது வழக்கில் தான் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் குற்றவாளிகள் என கடந்த 19-ம் தேதி சென்னை ஐகோர்ட் அறிவித்தது. தண்டனை விவரத்தை இன்று (21-ம் தேதி) நீதிபதி ஜெயச்சந்திரன் வெளியிட்டார்.
அதன்படி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதால் உடனடியாக இருவரும் சிறைக்கு அனுப்பப்படவில்லை.
இதற்கிடையே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கடந்த 19-ம் தேதியே பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்து விட்டார். அன்று இந்தியா கூட்டணி அழைப்பின் பேரில் ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். அமைச்சர் பதவியை இழந்துவிட்ட நிலையில் பொன்முடியால் உடனடியாக ஸ்டாலினை அப்போது சந்திக்க முடியவில்லை. 20-ம் தேதி காலையில் சென்னையில் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்திக்க சென்றார் பொன்முடி.
அப்போது பொன்முடி மிகவும் உணர்ச்சிகரமான நிலையில் இருந்ததாக தி.மு.க தரப்பில் கூறுகிறார்கள். 'கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விடுதலை ஆனதால் உயர்நீதிமன்றத்தில் எப்படியும் விடுதலை ஆகி விடுவேன் என நினைத்தேன். வழக்கறிஞர்களும் அப்படியே கூறினார்கள். ஆனால் இப்படி ஆகிவிட்டது' என பொன்முடி கண்கலங்கியபடி கூறியதாக தெரிகிறது.
அதற்கு ஸ்டாலின், 'நானும் அப்படித்தான் நினைத்தேன். எனினும் வழக்கறிஞர்களிடம் பேசி இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு விடுதலை பெறுவோம்' என பொன்முடிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த சந்திப்பு உருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்ததாக தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் உடனடியாக சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“