தி.மு.க நிர்வாகிகள் சிலரின் செயல்பாடு தன்னை தூங்கவிடாமல் ஆக்கி விடுகின்றன என்று தி.மு.க பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
அண்மையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதே போல, பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கனிமொழி தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், தி.மு.க நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் தன்னை தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறது என்று பேசியது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியும் செயல்பட்டு வருவது ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இதைக் குறிப்பிட்டுத்தான், முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்படி பேசினார் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் அப்படி பேசியது ஏன் என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்போதும் மக்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார். எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் எப்போதும் சிந்தனையிலேயே இருந்து கொண்டிருக்கிற காரணத்தால், அதனால்தான் அவர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"