வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று காலை 10.54 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் நீதிபதி, “2006 முதல் 2011ம் ஆண்டு வரை பொன்முடி,விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 486 ரூபாய்க்கு, அவரது வருமானத்தை விட அதிகமாக 64.90 % சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகி உள்ளது. இதனால் அவர்கள் குற்றவாளிகள் என முடிவு செய்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் டிச.21ஆம் தேதி பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள திமுக மூத்த அமைச்சர் பொன்முடி சரணடைய ஜன.22ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2-ம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை, அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது பொன்முடி, “நான் நிரபராதி, எனக்கு 73 வயதாகிறது.
நான் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். போதிய சாட்சிகள் இல்லாததால் கீழமை நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. ஆகவே குறைந்தப்பட்ச தண்டனை வழங்க கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் அவரது மனைவி விசாலாட்சி (68)யும் குறைந்த தண்டனை வழங்க கேட்டுக்கொண்டுள்ளார். இவர் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“