மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி நடந்த 2006 - 11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, கனிம வளத் துறைக்கும் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள குவாரியில், அனுமதிக்கப்பட்டதைவிட அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடுகள் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மற்ற 3 பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்க்கு விசாரணை பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேர் பிறழ் சாட்சியாக மாறினர். 2 பேர் மட்டுமே தங்களது சாட்சியை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் பிப்ரவரி 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில், மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர், “இந்த வழக்கில் எந்த உத்தரவையும் என்னுடைய சுய நினைவுடன் போடவில்லை” என்று கூறினார். மேலும், மேலும், “மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனக்கு அழுத்தம் கொடுத்ததால் மட்டுமே செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நான் கையெழுத்து போட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளில் மொத்தம் 10 பேர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.
பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில், மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற அதிகாரி பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“