சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் அவரை இல்லத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர்.
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வந்த காரில் ஏற்றி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக அவருக்கு உடனடி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், துறைகள் மாற்றப்படுவதை ஆளுனர் ஏற்பார் என நம்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், 31.05.2023 அன்று செந்தில் பாலாஜி பதவி விலக ஆளுனர் கடிதம் மூலமாக வலியுறுத்தினார் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுப்பப்பட்டது. அதில், ஒருவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறப்பட்டதாக தெரிவித்தார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அமலாக்கத் துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“