/indian-express-tamil/media/media_files/E4FQFxLB6kAs2K9ztGlX.jpg)
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்கள், விழுப்புரம் மாவட்டம் பூத்துறை பகுதிகளில் உள்ள செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.37 லட்சத்திற்கும் மேலான அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிடோர் மீது விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 26 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 22 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், இவ்வழக்கின் விசாரணையை வருகிற 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.