மு.கருணாநிதி தலைமையிலான 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதவி வகித்தார்.
அப்போது, பொன்முடி மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் லோகநாதன் என்பவர் உயிரிழந்துவிட்டார்.
இதற்கிடையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் பொன்முடி மகன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை தற்போது எம்.பி. எல்.ஏ.க்களுக்கு எதிரான நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி மலர் வாலண்டினா கவுதம சிகாமணி, கே. சதானந்தம், கோபிநாத், கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கு நவ.4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“