Ponmudi | Governor Rn Ravi | Cm Mk Stalin: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
தீர்ப்பு நிறுத்தி வாய்ப்பு
இதனையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை மார்ச் 11 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்த நிலையில், பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. மேலும், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மறுப்பு
ஆனால், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 14ம் ஆம் தேதி) பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முன்தினம் புதன்கிழமை கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கமால், திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். 3 பயணம் முடித்து வந்த அவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.
மேல்முறையீடு
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. தமிழக ஆளுநர் உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளார். பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை உச்சநீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுத்தி வைத்த பின், அவர் குற்றவாளி இல்லை என ஆளுநர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது. ஆளுநருக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம் இல்லையென்றால் இன்று தீர்ப்பு அளிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
பதவியேற்பு
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று மாலை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய முன்வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.
அதன்படி, இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.