அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையனின் ஆடியோவை வெளியிட்டு பிரபலமான நாஞ்சில் கோலப்பன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க-வின் ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் பொன்னையன் அ.தி.மு.க மூத்த தலைவர்களை விமர்சித்து பேசுவது போன்று ஆடியோ வெளியிட்டப்பட்டது. அதில் அவர் தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் என்றும், தலைவர்கள் தங்களின் பணத்தை காப்பற்ற ஓடுகிறார்கள். யாருக்கும் கட்சியின் மீது அக்கறையில்லை என்று பேசியிருந்தாக கூறப்படுகிறது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பொன்னையன் இந்த ஆடியோவிற்கு மறுப்பு தெரிவித்து, அது என் குரல் இல்லை என்றும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, கே. பி. முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த ஆடியோ எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஓ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் K.S. கோலப்பனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், திரு. நாஞ்சில் K.S. கோலப்பன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil