திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஹேமஸ்ரீ (47), என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூரியனார் கோவில் ஆதீனத்திடம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான அறிக்கை கேட்டு பெற்று சென்றனர்.
இருப்பினும், மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், நான் எதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். நான் திருமணம் செய்தது உண்மைதான். சிவாச்சாரியார் மடத்தைச் சேர்ந்தது தான் சூரியனார் கோவில். எங்களது ஆதீனத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் பலரும் ஆதீனகர்த்தர்களாக இருந்துள்ளனர் என தெரிவித்தார். இதை தொடர்ந்து சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், ஆதீனத்தின் மரபுகளை மீறி, மகாலிங்கசுவாமிகள் திருமணம் செய்துள்ளார். ஆதீனமாக பதவி வகிக்க அவர் தகுதியை இழந்து விட்டார். ஆதீனத்தின் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கவே ஆதீனம் திருமண செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஸ்ரீகார்யமான சுவாமிநாத சுவாமியை ஆதீனத்தில் இருந்து நீக்குவதாக ஆதீனமான மகாலிங்கசுவாமி நவ.10-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கிடையில், மகாலிங்கசுவாமி ஆதீனத்தை விட்டு வெளியேற வேண்டும் என சிலர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று மாலை சூரியனார்கோவில் மடத்திற்கு, வந்த அந்தப்பகுதி கிராம மக்கள் சிலர், மகாலிங்க சுவாமியை சந்தித்து, துறவறத்தில் இருந்து இல்லறத்திற்கு சென்றதால் தாங்கள் ஆதீனமாக நீடிக்க வேண்டாம். நீங்கள் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, அவர்களிடம் பேசிய மகாலிங்க சுவாமி அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கலாம். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என கூறியுள்ளார். இருப்பினும் கிராம மக்கள் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கூறினர். மேலும், அவரிடம் கடுமையான வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மகாலிங்கசுவாமி மடத்தில் இருந்த, அவரது பூஜை பொருட்கள் மற்றும் பையை எடுத்துக்கொண்டு மடத்தை விட்டு வெளியே வந்தார். அதனை சிலர் பறித்துக் கொண்டு, மடத்தின் வாசல் கதவை பூட்டி வலுக்கட்டாயமாக ஆதீனத்தை வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து, மகாலிங்க சுவாமிகள், சூரியனார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலக வாசலில், நாற்காலியை போட்டு அமர்ந்தார். அவருடன் மடத்தில் இருந்த பரமானந்தம், சச்சிதானந்தம் சுவாமிகள் ஆகிய 2 ஸ்ரீகாரியம் உடன் இருந்தனர். இது தொடர்பாக தகவலறிந்து வந்த டி.எஸ்.பி.க்கள் கீர்த்தி வாசன், ராஜூ மற்றும் போலீஸார், அங்கு கூடி இருந்த கிராம மக்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
அப்போது ஒரு தரப்பினர் ஆதீனம் மீண்டும் மடத்திற்குள் செல்ல வேண்டும் என கூறினார். இதனால், இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர்கள் சண்முகம், குருமூர்த்தி, ஸ்ரீராம், ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களிடம் மகாலிங்கசுவாமிகள் தெரிவித்ததாவது; என்னை பதவியில் உட்கார வைத்து விட்டு எந்த உதவியும் செய்யவில்லை. நான் நேரடியாக பக்தர்கள் உதவியுடன், ஆதீன தலைமை மடத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் பல கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன். நான் பலமுறை திருவாவடுதுறை ஆதீனத்துடன், சூரியனார் கோவில் ஆதீனத்தை இணைத்து விடுங்கள் என்று கூறினேன். அப்போது வரவில்லை. இப்போது ஏன் வருகிறீர்கள் என்றார்.
அதற்கு, நீங்கள் தான் திருவாவடுதுறை ஆதீனத்துடன் மோதல் போக்கை உருவாக்கி உள்ளீர்கள். தற்பொழுது மரபுமீறி செயல்பட்டுள்ளீர்கள். தாங்கள் ஆதீன மரபில் குருமகாசந்நிதானமாக இருக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என திருவாவடுதுறை ஆதீனம் தரப்பினர் கூறி சென்றனர். பிறகு, மகாலிங்சுவாமி சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும், இந்துசமய அறிநிலையத்துறை செயல் அலுவலர் ம.ஆறுமுகம் மற்றும் ஆய்வாளர் அருணாவிடம், ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கினா்.
இதைத்தொடர்ந்து, அவரை போலீஸார், நீங்கள் இங்கு இருந்தால், பிரச்சனை உருவாகும் என்பதால், உடனடியாக அங்கிருந்து செல்லுங்கள் என விரட்டியடிக்காத குறையாக கூறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீஸார், ஆதினம் மற்றும் 2 ஸ்ரீகாரியம் ஆகிய 3 பேரை அனுப்பி வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் ஆதீனம் கூறியதாவது: “சூரியனார் கோவில் ஆதீனத்தின் பொறுப்புகளை பட்டீஸ்வரம் செயல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளேன். 28-வது குருமகா சந்நிதானமாக இன்று வரை ஆட்சி செய்து வருகிறேன். அந்தப் பணியில் இருந்து என்னை நீக்கவில்லை. நிர்வாக பொறுப்புகளை மட்டும் கொடுத்துள்ளேன். ஆக்கிரமிப்புகளில் உள்ள சொத்துக்களை மீட்பதற்கு நீதிமன்றம் மூலம் மீட்டெப்பேன். 9 கோயில்கள் மற்றும் சொத்துக்கள் இந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஆதீனம் சொத்துக்களை மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளின் விளைவு தான் இது போன்ற நடந்துள்ளது. நான் இன்னமும் அறநிலையத்துறையினரிடம் முறையாக கணக்குகளை ஒப்படைக்கவில்லை, அறநிலையத்துறையினர் அழைக்கும் போது, அனைத்தையும் ஒப்படைப்பேன். இப்போது நான் வெளியூருக்கு செல்ல உள்ளேன்” என ஆதீனம் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.