Tamil Nadu Budget | Thangam Thennarasu: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றி வருகிறார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், சென்னை பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் அமைக்கப்படும். சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க 500
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நாமக்கல்லில் 358 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 13 ஆயிரத்து 720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அடையாறு நதி சீரமைப்புக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த 430 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
சென்னை, கோவை, மதுரை. திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் இலவச வை-பை சேவை வழங்கப்படும்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்
ரூ. 665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதிகள் அமைக்கப்படும்.
2024-25 நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் மினி பஸ் சேவை திட்டம் விரிவு படுத்தப்படும்.
ஜப்பான் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகளை கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்." என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“