'பழனியில் எனக்குக் கிடைத்த மரியாதை… காரணம் ஜெயலலிதா!' பூங்குன்றன் நெகிழ்ச்சி
ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், பழனியில் தனக்கு கிடைத்த மரியாதைக்கு காரணம் ஜெயலலிதாதான் என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அரசியலில் ஈடுபடாமல், கோயில் கோயிலாக ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Advertisment
இந்த நிலையில், பூங்குன்றன், பழநியில் தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையை குறிப்பிட்டு, இந்த மரியாதைக்கு காரணம் ஜெயலலிதாதான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பூங்குன்றன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: “இதய தெய்வத்திடம் வேலை பார்த்த பொழுது தைப்பூசத்திற்கு பழநி பாத யாத்திரை செல்வேன். பழநி பாதயாத்திரை எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த நான்கு நாட்கள் நான் அடையும் ஆனந்தத்திற்கு கரை காண முடியாது. பழநியில் இருப்பது எனது சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற மகிழ்வைத் தரும். கோயிலில் பணியாற்றும் அத்தனை பேரும் என்னுடைய உறவினர் போல் நடந்து கொள்வார்கள். பாசத்தை அள்ளித் தெளிப்பார்கள். அதற்கு காரணம் அம்மா.' அன்பும், ஆறுதலும் அம்மா இருந்தபோது பெரிய மரியாதை கிடைத்திருக்கும், ஆனால் இன்றுமா? என்று நீங்கள் நினைத்தால் அது பிழை. நீங்கள் நினைப்பது அரசியலில் மட்டுமே சாத்தியம். பழநியில் அப்படி அல்ல. நான் இன்றும் பழநிக்குச் சென்றால் அதைவிட அதிகமான அன்பை காட்டி, தைரியமும் சொல்லி அனுப்புகிறார்கள் நண்பர்கள். ஏன்? எந்த கோயிலுக்கு சென்றாலும் அன்பும், ஆறுதலும் நிரம்பக் கிடைக்கிறது. அதற்குக் காரணமும் அம்மா. தினமும் தொழுகிறேன் பங்குனி உத்திரத்தின் நாயகன், என் அப்பன் பழநி தண்டாயுதபாணியின் பிரசாதத்தை, திருஆவினன்குடியில் குழந்தை வேலப்பனை கன்னத்தில் வருடி தினமும் முத்தம் கொடுக்கும் அருட்பேறு பெற்ற முரளி சிவம் அவர்கள் என்னை சந்தித்து கொடுத்துவிட்டுச் சென்றார். கடவுளிடம் பணியாற்றும் நல்ல உள்ளங்கள் என்னை நினைவில் வைத்திருப்பதற்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதற்குக் காரணமான அம்மாவை தினமும் தொழுகிறேன்.” என்று பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"