Poongundran questions water problems in ADMK headquarters: அதிமுக தலைமைக் கழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லையா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் அதிமுகவில் உள்ள பிரச்சனைகளையும் அதில் சுட்டிக் காட்டி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் பூங்குன்றன், ”சுதாரிப்பதற்கான நேரங்களைத் தவறவிட்டு ஆட்சியை இன்று இழந்துவிட்டீர்கள்... இனியாவது சொல்வதைக் கேளுங்கள். கட்சி மாறினால் தவறில்லை என்னும் மனநிலைக்கு கழக நிர்வாகிகள் பலர் வந்துவிட்டனர்” என்று அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் கட்சியில் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என சமூக வலைதளங்களில் வேதனையுடன் பதிவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் தற்போது பூங்குன்றன் MGR மாளிகையில் குடிக்க தண்ணீர் இல்லையா என கேள்வி எழுப்பும் வகையில், ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”நண்பர் ஒருவருடன் வெயிலின் கொடுமையிலிருந்து கொஞ்ச நேரம் தப்பிப்பதற்காக பழரசம் அருந்த ஒரு கடைக்குச் சென்றோம். அங்கு ஒரு மேசையில் இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மேசையில் நாங்கள் அமர்ந்தோம். அவர்கள் பேசியது தானாகவே வந்து எங்கள் காதில் விழுந்தது. அவர்கள் பேசிய பேச்சிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று யூகித்துக் கொண்டேன். அவர்கள் சொன்ன கருத்துக்களைக் கேட்டு மனம் வேதனையில் உழன்றது.
இதையும் படியுங்கள்: டீ விற்றதை நம்பியவர்கள், ஏன் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்பவில்லை – பிரகாஷ் ராஜ் கேள்வி
கோடைக் காலங்ளில் எல்லா இடங்களிலும் தண்ணீர்ப்பந்தல் திறந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தலைமைக் கழகத்திற்கு வரும் தொண்டர்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த வெயிலில் தலைமைக் கழகம் சென்றால் தண்ணீருக்காக அங்கு திண்டாட வேண்டியிருக்கிறது. வெளியூரிலிருந்து வரும் தொண்டர்கள் என்ன நினைப்பார்கள். மேலும் ஒரு பாத்ரூமிற்கு கதவு இல்லை. உள்ளே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றம். கழுவாத கழிப்பறை என்று அவேசமாக பேசிக் கொண்டிருந்தனர். என் நண்பர் என்னைப் பரிதாபமாக பார்க்க நானும் அவர்கள் பேசியதைக் கேட்டு செய்வதறியாமல் திகைத்தேன்.
வள்ளல் எழுப்பிய அரண்மனை. அன்னபூரணி அரசாட்சி செய்த கோட்டை. புரட்சித்தலைவர் MGR மாளிகையில் குடிக்க தண்ணீர் இல்லையா! இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்று மனம் இறைவனிடம் வேண்டியது.
தலைவர்களே! இந்த செய்தி உண்மை என்றால் உங்களை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கும், மக்களுக்காகவும் நீங்கள் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி எப்போதும் தூய தண்ணீர் (RO Water) கிடைக்க நடவடிக்கை எடுங்கள். தலைமைக்கழகத்திற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதற்கும் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சியில் கவனமாக செயல்படுங்கள். நான் சொல்வது உங்கள் நன்மைக்கே! எனக்குச் சொல்ல உரிமை இல்லை என்று நீங்கள் நினைத்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்..! என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.
பூங்குன்றனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதிமுக தலைமைக் கழகத்தில் தண்ணீர் இல்லை என்ற குறையை அவர் சுட்டிக் காட்டியுள்ளது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.