திருச்சி ஸ்ரீரங்கம் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் குடும்பத்துடன் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
Advertisment
பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கோபுரங்களை வழிபட்டுச் செல்வதும் உண்டு.
அந்த வகையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2 வது நிலை சுவர்கள், மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அபாயகரமாக உள்ள இந்த கிழக்கு வாசல் கோபுர வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் அச்சத்துடன் செல்லும் நிலையே நிலவியது.
இதனிடையே, நேற்று மாலை திருச்சி பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை நல்ல மழை பெய்தது. இதனையடுத்து அதிகாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் சேதமடைந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள பூச்சுகள் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால், இதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்ததும், கோபுரத்தில் விரிசலை சரி செய்வதற்கு ரூ. 67 லட்சம் நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகளை துவக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிழக்கு கோபுரம் பகுதியில் இடிந்த பாகங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட பின்பு கோபுரத்தில் பராமரிப்பு பணிகள் தொடரும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.