அஞ்சல் துறை தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்ற மே மாத அறிவிப்பாணை ரத்து செய்யப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறையில் தபால்காரர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 14 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.-வுமான எழிலரசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாக தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன், அஞ்சல் துறை சார்பில் இரண்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றில் மே 10ஆம் தேதியிட்ட அறிவிப்பாணையில் அஞ்சல்துறை தேர்வில் இரண்டாம் தாள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், அது பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கபட்டு, விண்ணப்பதாரரின் தகுதிகளில் ஒன்றாக "பிராந்திய மொழியறிவு பெற்றிருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 11 தேதியிட்ட அறிவிப்பாணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அஞ்சல் துறை தாக்கல் செய்த விளக்கத்தில் இந்த இரண்டு அறிவிப்புகளும் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும், அதனால் தற்போதை நிலையில் ஆட்சேர்ப்புக்கான எந்த நடைமுறையும் நிலுவையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மே மாத அறிவிப்பாணை குறித்த விளக்கத்தை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில், மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என ஜூலை 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும்; ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற மே 10ஆம் தேதி அறிவிப்பு ரத்து செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த அறிவிப்பாணையின் நடைமுறைகள் தொடர்வதாகவும், அதுதொடர்பான ஆவணத்தை நாளை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை நாளையே (ஜூலை 30) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.