இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு! – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்புக் குரல்

தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது எனவும், 2ம் தாள் தேர்வு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது

By: Updated: July 13, 2019, 09:12:51 PM

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புதிய உத்தரவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தபால்துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் கேள்வி கேட்கப்படும். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு தபால் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடந்தது.

இத்தேர்வில் அரியானா, பீகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 4 வருடங்களாக தபால் துறைகளுக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது. தற்போது, ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, இனி தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது எனவும், 2ம் தாள் தேர்வு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, 2ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் மூலம் முதல் தாளை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.

இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது, அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எம்.பி. திருமாவளவன்

அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளை தமிழில் நடத்தவேண்டும், இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி – தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விசிக எம்.பி. ரவிக்குமார்

அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தமிழில் தேர்வு எழுதும் வசதியை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்றும் தமிழகத்தை சேராதவர்களை தமிழகத்தில் பணியமர்த்த சதித்திட்டம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Postal exams will be conduct only in english and hindi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X