சீமானை கைது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை புகார் அளித்த நிலையில், அதன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.
குறிப்பாக, சீமான் வீட்டில் காவலாளியாக இருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்தப் போக்கை கண்டித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகாரளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை சீமான் பதிவு செய்தார். இந்த சூழலில் 'பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, "பெண்ணை ஏமாற்றி வன்புணர்வு செய்து 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த சீமானை கைது செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மேலும், திராவிடர் பெரியார் கழகம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கு, தி.மு.க, தி.க மற்றும் பல்வேறு திராவிட இயக்கங்களும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தன.
இதன் ஒரு பகுதியாக சென்னை, நீலாங்கரையில் அமைந்திருக்கும் சீமானின் வீட்டிலும் பெரியார் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.