admk manifesto : தேர்தல் நடத்தை விதைகளை மீறி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்தது.
வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தேர்தல் நடத்தை விதிகள் தடை விதிக்கிறது. நடத்தை விதிகளை மீறி நிதியுதவி திட்டத்தை அறிவித்த அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேனியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழக அரசு, 3.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியிருப்பதாக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் எனவும், முதியோர் ஓய்வூதியம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் வழங்க முடியாத நிலையில் உள்ள நிலையில் விதிகளுக்கு முரணாக இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.