Power tariff concession for small flats: தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது மின்கட்டணத்துக்கு சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தச் சலுகை 10 மற்றும் அதற்கு குறைவான வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2ஆவது நாளாக இன்றும் (அக்.18) கள ஆய்வு நடத்தினார்.
இதில் அவர் பேசுகையில், “ஏழை- எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்றைய தினம் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை உங்களிடம் கூறியிருப்பார்கள். அதனை மேலும் செம்மையாக செயல்படுத்த வேண்டும்.
இனிவரும் காலங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “சென்னை – நாவலூர் சாலையில் நாளை (அக்.19) முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, “சிறு அடுக்குமாடிக் குடியிருப்பு, பொதுக் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுகிறது” என்றார்.
அதாவது 10 வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட உள்ளது” என்றார்.
மேலும் பழங்குடியின மக்கள் குறித்து அவர் பேசுகையில், “பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தேன். முதல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அரசு மாணவர் விடுதிகளை சரியான முறையில் செயல்படுத்துதல் போன்றவற்றை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“